‘ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்படும்!’ - அமைச்சர் அன்பில் மகேஸ்
வரும் கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அந்த பள்ளியிலேயே நால்வகை சான்றுகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் கல்வியாண்டில் 6- ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கிடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல்தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு அவசியம்.
இதற்காக மாணவர்கள் தற்போது அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வருவகிறார்கள். இந்த சிரமத்தைக் குறைத்திடும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்தப் பள்ளிகள் மூலம் EMIS தளத்தின் வாயிலாக சான்றிதழ்கள் பெற்றுத்தரப்படும்” என்று கூறியுள்ளார்.