செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு குன்றத்தூர் அடுத்த பரணிபுத்தூர் பகுதியில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டிஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்... “இந்த தொகுதியில் நாம ஜெயிக்கலனா யாரும் ஜெயிக்க முடியாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிஜேபி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். இந்தியா முழுவதும் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கினார். இந்தியா ஒரு வடிவம் ஆகிவிட்டது.
பாமக அங்கு பேசினார்கள். ஆனால், இன்று இங்கு வந்து விட்டனர். எல்லாம் ரேட் வித்தியாசம்தான். நமது கூட்டணி கொள்கை கூட்டணி. எதிரணியினர் கொள்கை இல்லாத கூட்டணி. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை பெரும் துணையாக இருக்கும்.
வெயில் அதிகமாக இருப்பதால் மாலையில் நம் வீரர்கள் பிரசாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று துண்டு பிரசுரம் கொடுக்க வேண்டும்.
வாக்காளர்கள் சலித்துக் கொண்டாலும் தினந்தோறும் சென்று அவர்களை பார்க்க வேண்டும். வாக்கு சேகரிக்கும் இடத்தில் ஆயிரம் பேர் இருந்தால்தான் வேட்பாளர் பேசுவார்... குறைவான ஆட்கள் இருந்தால் வேட்பாளர் பேச மாட்டார்” என்று கூறினார்.