பெண்ணின் திருமண வயது 21: மாற்றத்தின் காரணம் என்ன? பரிந்துரைத்த ஆய்வுக்குழு விளக்கம்

பெண்ணின் திருமண வயது 21: மாற்றத்தின் காரணம் என்ன? பரிந்துரைத்த ஆய்வுக்குழு விளக்கம்
பெண்ணின் திருமண வயது 21: மாற்றத்தின் காரணம் என்ன? பரிந்துரைத்த ஆய்வுக்குழு விளக்கம்
Published on

பெண்களின் திருமண வயதை உயர்த்தி, அதை 21 வயதென்று நிர்ணயிக்கும் மசோதா இன்று மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து அதிகாரிகளும் விளக்கியுள்ளனர்.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கும் நிலையில், அதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விரைவிலேயே இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் குழந்தை திருமண தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் இந்து திருமணச் சட்டம், மற்றும் சிறப்பு திருமணம் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் விளக்கினர்.

பெண்களின் சட்டபூர்வ திருமண வயது 21 ஆக அதிகரிக்கப்படுவது ஏன்? பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலனை கருத்தில் கொண்டும்; மற்றும் மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்ற வருடம் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அம்சங்கள் குறித்து பேசும்போது, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை தேவை எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல சென்ற வருடம் தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஒரு குழு அமைத்து பரிசீலனை நடத்தப்படும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சென்ற வருடம் ஜூன் மாதத்தில், ஜெயா ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர் வீ.கே. பால் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி; சுகாதாரம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றனர்.

இந்தக் குழு பல கட்டங்களாக கருத்துக்கணிப்புகள் மற்றும் ஆய்வுகளை நடத்தியது. அதில் பங்கேற்ற பெரும்பாலானோர், பெண்களின் அதிகாரபூர்வ திருமண வயதை 22 அல்லது 23 ஆக நிர்ணயிக்கலாம் என தெரிவித்து இருந்தனர் என்றும் இதன் மூலம் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முன்னேற்றங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.

தாய்-சேய் சத்துக்குறைபாடு மற்றும் மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்புகளை தடுப்பது ஆகிய நோக்கங்கள் பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதால் நிறைவுறும் என கருதப்பட்டது. பெண் தாயாக சரியான வயது என்ன என்பதை கண்டறிவதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாக இருந்தது. நிதி ஆயோக் இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கலாம் என பரிந்துரை செய்தது.

சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் அடிப்படையில் பெண்களின் திருமண வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என பெண்கள் அமைப்புகள் ஜெயா ஜெட்லி குழுவின் ஆய்வில் தெரிவித்திருந்தன. பெண்கள் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தற்போது பங்கேற்பதால், இந்த மாற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் பெண்களின் ஆரோக்கியம் மட்டும் அல்லாது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்பது அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது ஆண்களின் திருமண வயது 21ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டத்தின் இந்த திருத்தம் மூலம் பெண்களின் திருமண வயது மற்றும் ஆண்களின் திருமண வயது இரண்டும் சமமாக நிர்ணயிக்கப்படுகிறது. 1978ஆம் ஆண்டு வரை பெண்களின் திருமண வயது 15 ஆக இருந்தது. அதை அதிகரிக்க வேண்டும் என அந்த சமயத்தில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆண்களுக்கு வாக்குரிமைக்கான வயது 18 ஆக இருந்த போதிலும், திருமணத்துக்கான வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போலவே இப்போது பெண்களுக்கான திருமண வயது 21 நிர்ணயிக்கப்படுவது பிற உரிமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18ஆக சட்டரீதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தபோதிலும், குழந்தை திருமணங்கள் குறித்த தகவல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, குறிப்பாக ஊரகப்பகுதிகளில் இருந்து, அடிக்கடி தெரிவிக்கப்படுகின்றன. ஆகவே சட்டரீதியான இந்த வயது வரம்பு அதிகரிப்பை தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் இது தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வல்லுனர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com