தமிழக அரசின் உத்தரவை மீறி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்கள் - நேரடி ரிப்போர்ட்
குமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்வதைக் கண்டித்து போராட்டங்கள் நடப்பதும், கனிமவள லாரிகள் சிறை பிடிக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்நிலையில், 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களில் கனிம வளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 23ஆம் தேதி தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக கேரள எல்லையான கலியக்காவிளை சோதனைச் சாவடியில், புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. பிரதான எல்லைப் பகுதியான கலியக்காவிளையில் இருக்கும் காவல்துறை சோதனைச் சாவடியில் மேற்கொண்ட கள ஆய்வில், ஒன்றரை மணி நேரத்தில் 46 டிப்பர் லாரிகள் கடந்து சென்றன. இதில், 40 லாரிகள் 10 சக்கரங்களுக்கு மேலான வாகனங்களாக இருந்தன.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 10, 12, 14, 16 மற்றும் 18 சக்கர வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு கொல்லங்கோடு கலியக்காவிளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக தினசரி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் எல்லைப் பகுதியில உள்ள சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு எந்த சோதனையும் இன்றி கடந்து செல்வதை காணமுடிந்தது.