கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த், பாஜக கூட்டணி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர், அதிமுக கூட்டணி சார்பில் பசிலியான் நசரேத் போன்றோரும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
பிரதான கட்சிகளின் 4 வேட்பாளர்களுமே கோடீஸ்வரர்கள் என அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு மூலம் தெரியவந்துள்ளது.
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்:
பா.ஜ.க வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணனின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.64,03,778 ஆகும். அசையா சொத்துக்கள் ரூ.6,99, 40,155 ஆகும். இவரது அசையா சொத்துக்கள் பூர்வீக குடும்ப சொத்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன.
அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்:
அ.தி.மு.க வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3,34,77,241 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ. 4,82,10,790 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பசிலியான் நசரேத்தின் மனைவி மேரி பசிலியானின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 1,04,95,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. பசிலியான் நசரேத்திடம் உள்ள mercedes Benz காரின் மதிப்பு மட்டு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் எனவும் மற்றொரு கார் 65 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர்:
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபரும் கோடீஸ்வர வேட்பாளர்தான். அவரது அசையும் சொத்தின் மதிப்பு ரூ.2,41,20,999 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ. 2,13,65,509 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அசையும் சொத்தில் 1000 கிராம் தங்க நகைகள், 70 கிராம் பிளாட்டினம் ஆகியவைகளும் அடங்கும். மரிய ஜெனிபரின் கணவர் சாலோமன் தீபக் பெயரிலுள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1,14,23,914 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்தும் கோடீஸ்வரர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த முறை 52 கோடியே 28 லட்சம் ரூபாய் சொத்துகள் இருப்பதாக கூறியிருந்தார். தற்போது 61 கோடியே 90 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்