காணாமல் போன தனது 3 மாடுகளை கண்டுபிடித்துத் தரும்படி பால் வியாபாரி ஒருவர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருட்டு, வழிப்பறி, கொள்ளை, அடிதடி, கடத்தல் போன்ற புகார்கள் காவல் நிலையத்திற்கு வருவது வழக்கம். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் இது பொருந்தும். அண்மையில் சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு செருப்பைக் காணவில்லை என ஒரு விசித்தரப் புகார் வந்தது. அதே பாணியில் ஒரு வித்தியாசமான புகாரை கொடுப்பதற்காக, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் வியாபாரி கோட்டீஸ்வரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். தனது இரண்டு பசுக்கள் மற்றும் ஒரு காளை மாட்டைக் காணவில்லை என கோட்டீஸ்வரன் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது மட்டுமின்றி, மாடு இருக்குமிடத்தை தானே கண்டறிந்து சொன்ன பிறகும்கூட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கோட்டீஸ்வரனின் புகாரைப் பெற்றுக்கொள்ள காவல் ஆணைய அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மாடுகளை கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கோட்டீஸ்வரன் கூறுவது, பிறருக்கு வேண்டுமானால் வியப்பையும், நகைப்பையும் ஏற்படுத்தலாம். ஆனால் கோட்டீஸ்வரனைப் பொறுத்தவரை அது வெறும் புகார் அல்ல. அவரது வாழ்வாதாரம்.