எம்ஜிஆர் ஆட்சியை தரப் போகிறோம் என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் எம்ஜிஆர் ஆட்சியை முதல்வர் பழனிசாமியால் மட்டுமே தர முடியும் என்று திருவேற்காட்டில் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்
சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை திருவேற்காட்டை அடுத்த வேலப்பன் சாவடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
’’புரட்சித்தலைவர் ஆட்சியை தர போகிறோம் என யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு பிரசாரம் செய்கிறார்கள்என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆர் ஆட்சியை முதல்வர் பழனிசாமியால் மட்டுமே தர முடியும்.
சிலர் தலைவரின் வாரிசு என்று கூறுவது எதற்கும் ஒவ்வாத விஷயம், இயக்கத்தின் ஆன்மா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும்தான். அதிமுக அரசின் கஜானா காலியாகி விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறினார்கள். ஆனால் இப்போது
5000 கோடி ரூபாயை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் வலிமைப்படுத்தப்பட்ட அரசாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு பணம் கொடுப்பது ஏன் என்று கேட்கும் எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் ஐந்தாயிரம் கொடுங்கள் என்று கூறினார்கள்.
தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற எண்ணம் இந்த கட்சிகளுக்கு வந்து விட்டது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு பணம் தருகிறது’’ என்றார்.