புரட்சித்தலைவராக எண்ணற்றவர்களால் போற்றப்படும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் கனவுத்திட்டம் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவது. இதற்காக நவல்பட்டு கிராமத்தில் துணை நகரம் ஒன்றையும் உருவாக்கினார். ஆனால், அந்த கனவுத்திட்டம் காலாவதியாகும் நிலையில் இருக்கிறது.
திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க விரும்பிய எம்ஜிஆர் இதற்காக நவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அண்ணா நகர் பகுதியை துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினார். அகலமான சாலைகள், வீட்டு மனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய இந்த துணை நகரத்துக்கு 1984ஆம் ஆண்டு திறப்பு விழா நடந்தது. தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் முதல் முறையாக அகல பாதாள சாக்கடை திட்டம் இங்கு தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு 1984ஆம் ஆண்டிலேயே ஐந்தாயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. ஆனால் முறையான பராமரிப்பின்றி தற்போது பரிதாபமான நிலையை எட்டியுள்ளது இந்த துணை நகரம்.
பாதாள சாக்கடை நீரை சுத்திகரித்து வெளியேற்றுவதற்கான இயந்திரங்கள் பழுதாகிவிட்டதால் சாதாரண நாட்களில் சாலைகளிலும், மழை காலங்களில் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் வழிந்தோடுவதாக இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மக்கள் வரிப்பணத்தை கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் சிதிலமடைந்தும், புதர்கள் மண்டியும் காணப்படுகின்றன. மின்கம்பங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் நிற்கின்றன.
33 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு கட்டப்பட்டு தற்போது காலாவதியாகி வரும் இந்த துணை நகரத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.