மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜுன் 12-ல் தண்ணீர் திறக்க தமிழக அரசு அறிவித்ததையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து இதுவரை ஜூன் 12-ல் 16 முறையும், ஜூன் 12-க்கு முன்பாக 10 முறையும், காலதாமதமாக 60 முறையும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 17-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலமான ஜூன் 12-இல் இந்தாண்டு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதாலும் இந்த மாத இறுதிக்குள் கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பிலும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 100.66 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 66 டிஎம்சி ஆகும். நீர்வரத்து 2,100 கன அடியாகவும் வந்து கொண்டிருக்கிறது.