மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் அணையின் மதகை திறந்து வைத்தனர். அணையிலிருந்து முதற்கட்டமாக ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு கால்வாய் வழியாக 27ஆயிரம் ஏக்கரும், மேற்கு கால்வாய் மூலம் 18ஆயிரம் ஏக்கரும் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குறைவாகவுள்ளதால், சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் என விவசாயிகள் கூறுகின்றனர்.