சென்னையில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான பாதுகாப்பு வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை - 12 மணி நேரம் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயங்கும். விமான நிலையத்திலிருந்து - வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது.
சின்ன மலையிலிருந்து-சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சேவை செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்குகிறது. பீக் அவர்ஸ் என்னும் மெட்ரோ பயணிகள் அதிகமாக வரக்கூடிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் இயங்கும்
மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒவ்வொரு மெட்ரோ நிறுத்தங்களிலும் மெட்ரோ ரயில் 50 வினாடிகள் நின்று செல்லும். முன்பு 20 வினாடிகள் மட்டுமே நின்று சென்று வந்த நிலையில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொறுமையாக மெட்ரோ ரயில்களில் ஏறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மெட்ரோ ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான குறியீடுகளை பயணிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.