சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த சூழலில், தற்போது அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் இதுபற்றி நம்மிடையே கூறுகையில், “இன்று அதீத கனமழைக்கு வாய்ப்பில்லை. அதேநேரம் சென்னையில் இன்று (அக் 16) பிற்பகல் 3 மணியிலிருந்து நாளை (17 ஆம் தேதி) அதிகாலை வரை, மிக கனமழையே பெய்ய வாய்ப்புள்ளது” எனக்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஓரிரு பகுதிகளில் அதிக கனமழை பெய்துள்ளது. உதாரணத்துக்கு கத்திவாக்கத்தில் 24 செமீ மழையும், அம்பத்தூரில் 22 செ.மீ மழையும் அதிகனமழையாக பெய்துள்ளது.
நாளையை (அக்டோபர் 16) பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பில்லை. ரெட் அல்ர்ட் என்பது பெய்யப்போகும் மழைப்பொழிவு மட்டுமில்லாமல், பெய்து முடித்த மழைப்பொழிவை பொறுத்தும் இருக்கும். எனவே, ரெட் அலர்ட் என்பது இம்மாவட்டங்களில் தொடரும். ஆனால், அதீத கனமழைக்கு வாய்ப்பில்லை.
பெரும் மழையை சென்னை கடந்து விட்டது. பிற்பகல் வரை மிதமானது முதல் சற்றே கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் இன்று பிற்பகல் முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்ப்பார்க்கலாம். கனமழை என்பது 6 செமீ என்று இருக்கும், இது பாதிக்கும் அளவில் இருக்காது.
உள்மாவட்டங்களை பொறுத்தவரை காற்றதழுத்த தாழ்வுப்பகுதி என்பது தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது, அதீத கனமழைக்கான வாய்ப்புகள் குறைகிறது. இம்மழையை இன்று மாலை நாளை அதிகாலை வரை எதிர்ப்பார்க்கலாம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே, 380 கி.மீ தொலையில் உள்ளது. இத்தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து, சென்னைக்கு அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கனமழையை உருவாக்கக்கூடிய அடர்ந்த மேகக்குவியல்கள் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதால், தெற்கு ஆந்திரா மற்றும் மத்திய ஆந்திர பகுதிகளில் அதிகனமழையை எதிர்ப்பார்க்கலாம்” என்றார்.