சென்னையில் எதிர்பாராவிதமாக இன்று அதிகமாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், “கணிக்கப்பட்டதைவிட சென்னையில் அதிக மழை பெய்திருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து பிற்பகலில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. அந்தவகையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், வடபழனி, வேளச்சேரி, மயிலாப்பூர், மீனம்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட இடங்களில் கடுமையாக மழை பொழிந்தது. திடீரென மழை பெய்ததால் வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக, சாலைகளில் கடுமையாக நீர் தேங்கியது.
சென்னை தலைமைச் செயலக பகுதியிலும் அதிகமாக மழைநீர் தேங்கியுள்ளது. தலைமைச்செயலகத்திற்குள் தரைத்தளத்திலுள்ள அலுவலக அறைகளுக்குள் மழைநீர் புகுந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மழைநீரை வெளியேற்றும் பணி அங்கு நடைபெற்று வருகிறது.
மழை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் புதிய தலைமுறையிடம் பேசுகையில், “சென்னையில் எதிர்பாராத விதமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மிதமான மழையே கணிக்கப்பட்டிருந்தது. இதேபோல நாளை, நாளை மறுநாளும் மழை தொடரும். கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். தமிழக நிலப்பகுதியை நோக்கி மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்ததால், அதிக மழை பெய்துள்ளது” என்றார்.