செய்தியாளர்: C.விஜயகுமார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் அடுத்த பூவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான இடத்தில் போர்வெல் கிணறு அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நான்கு ஐந்து அடிக்கு கீழே தோண்டியபோது போர்வெல் இயந்திரத்தில் வித்தியாசமான சத்தம் வந்துள்ளது.
இதையடுத்து சண்முகம் மற்றும் அவரது வேலையாட்கள் அந்த இடத்தை மேலும் தோண்டிப் பார்த்துள்ளனர். அப்போது அடியில் சிலைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சண்முகம், நீடாமங்கலம் காவல்துறையினருக்கும், வட்டாட்சியர் தேவேந்திரனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வட்டாட்சியர் வந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு, அம்மன், நடராஜர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட 8 உலோக சிலைகள் பூஜை பொருட்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறிய சுவாமி சிலைகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. மேலும் இதன் மதிப்பு பல கோடி இருக்கும் எனவும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் எனவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அங்கு கிடைத்த சிலைகளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சிலைகளை ஆய்வு செய்த பின்னர் சிலைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறித்தும் இதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.