மேலூர் அருகே கேசம்பட்டியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் செல்போன் வெடித்து உள்ளதால், மொபைல் காரணமாக மின்னல் தாக்கம் அவருக்கு ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கேசம்பட்டியில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது அந்த ஊரை சேர்ந்த 19 வயதுடைய ராஜா என்ற இளைஞர், விவசாய நிலத்தில் இருந்த நெல் குவியலை தார்பாய் போட்டு மூடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக மின்னலால் தாக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவர் ராஜா வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலவளவு காவல்துறையினர், ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். முதற்கட்ட தகவலின்படி உயிரிழந்த ராஜாவின் செல்போன் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மழை பெய்தபோது ராஜாவின் செல்போன் கதிர்வீச்சு மூலம் மின்னல் தாக்கி அவர் உயிரிழந்திருக்கலாமோ என கணிக்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட தகவலை வைத்து காவல்துறை மேற்கொண்டு விசாரணையை தொடங்குவர் என தெரியவந்துள்ளது.