மேகதாது அணை விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு முதல்வருக்கு கடிதம்

மேகதாது அணை விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு முதல்வருக்கு கடிதம்
மேகதாது அணை விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு முதல்வருக்கு கடிதம்
Published on

மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டு கர்நாடக அமைச்சர் டி கே சிவகுமார் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

இதனையெடுத்து திட்ட வரைவுக்கு மட்டுமே மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது, இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதனைதொடர்ந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அதில், மேகதாது அணைக் கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது எனவும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சூழலில் மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.  இத்னைதொடர்ந்து கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டு கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “மேகதாது அணை திட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது எனத் தெரியவில்லை. மேட்டூர் அணையில் இருந்து கடலில் கலக்கும் நீரை தடுக்கவே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை வேண்டும் என்று கூறுகிறது. மேகதாதுவில் அணை தொடர்பாக   பேசி தீர்வு காண கர்நாடக அரசும் மக்களும் விரும்புகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்க வேண்டும் என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com