கன்னியாகுமரியில் எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலையில் ஈடுபட்டது தவுபீக், ஷமீம் என்ற இருவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தடைசெய்யப்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த மன்சூர், ஜெபிபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷா தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா அமைப்பின் தலைவரான மெஹபூப் பாஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.