மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை அமைப்பதற்கு கர்நாடக அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில் இதற்கு எதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. குறிப்பாக திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் அதற்கு அனுமதியை வழங்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி இருந்தது.
இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டும்தான் மேகதாது அணை அமைக்க அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக கூறி இருந்தது. இதற்கிடையில் ஜூன் 17ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் (CWC) நடைபெறவுள்ள 16வது ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது. கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்றுள்ள ஆணையத்தின் தலைவர் நடைபெற உள்ள "காவிரி நீர் மேலாண்மை ஆணைய" கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் விவகாரம் நிலுவையில் இருக்கும் பொழுது அதனை ஆணையக் கூட்டத்தில் விசாரிப்பது என்பது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு உரிய அதிகாரம் படைத்த ஆணையம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அல்ல என்றும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இரு மாநிலங்களுக்கும் இடையே முறையாக நீர் பங்கீடு செய்வதற்கு மட்டுமே என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
கர்நாடக அரசு தரப்பில் காவிரி ஆற்றிலிருந்து "லிப்ட் இரிகேஷன்" முறையில் நீரை விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அது குறித்து தமிழக அரசு விவாதிக்க வேண்டுமென முந்தைய கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் இப்போது "மேகதாது அணை" தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்க கோரிய மனு ஏற்றுக் கொண்டிருப்பது ஏற்கமுடியாத ஒன்று எனவும் உச்சநீதிமன்ற முந்தைய உத்தரவுக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு கொண்டுவர தமிழக வழக்கறிஞர்கள் முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-நிரஞ்சன் குமார்
இதையும் படிக்கலாம்: தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மின் பயன்பாடு!