புத்தாண்டையொட்டி நட்சத்திர விடுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நட்சத்திர விடுதிகளின் நிர்வாகிகளும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகளை வழங்கிய காவல்துறை உயரதிகாரிகள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
பொழுதுபோக்கு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விண்ணப்பித்து 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை சிறப்பு உரிமம் பெற வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளில் உணவு மற்றும் மது விற்பனை நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும், விடுதியின் நீச்சல் குளங்கள் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணிவரை மூடிவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.