உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து முதல் நாள் நிகழ்வாக நேற்று மாலை மீனாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
சுவாமியும் அம்மனும் வீதியுலா வந்தபோது மாசி வீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தனர். சுவாமி அம்மன் வீதியுலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடமிட்டும், சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் ஊர்வலமாக சென்றனர்.
முன்னதாக மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்ததால் இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த வீதியுலா 8:00 மணிக்கு அதாவது ஒருமணி நேரம் தாமதத்திற்குப் பிறகு தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து விழாவின் 2வது நாளான இன்று காலை மீனாட்சியம்மன் தங்க சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் உலா வந்து கோயிலுக்குள் முத்துராமய்யர் மண்டகபடியில் எழுந்தருளினார். இதேபோல் இரவு 7 மணிக்கு பூதம், அன்ன வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வருவார். சுவாமி வீதி உலா வந்த பகுதிகளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வரும் 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 5ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.