மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு 2 -வது கட்டமாக இன்று ஆய்வு செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து சம்பவம் தமிழகம் உட்பட இந்தியாவின் மொத்த கவனத்தையும் திருப்பியது. இதையடுத்து தீவிபத்திற்கான காரணங்களை கண்டுப்பிடித்து, அரசு தரப்பில் சீறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கோவில் தூண்களின் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு இன்று 2-வது முறையாக தங்கள் ஆய்வை மேற்கொண்டது. பின்னர் குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், சத்தியமூர்த்தி கூறுகையில், “கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தூண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த பகுதிகளை பாதுாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகள் ஆவணப்படுத்திய பிறகு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வீரவசந்தராயர் மண்டப சிலைகள், தூண்கள் சேதமடையாமல் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். எவ்வளவு நாட்களில் பணி முடியும் என்ற விவரம் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று கூறினர்.