குறைந்த விலையில் மருந்துகள்: புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய திட்டம்

குறைந்த விலையில் மருந்துகள்: புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய திட்டம்
குறைந்த விலையில் மருந்துகள்: புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய திட்டம்
Published on

புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையின் பட்டமேற்படிப்பு மையத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லஷ்மிநாராயணன் எம்எல்ஏ கலந்து கொண்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "எய்ட்ஸ் நோய் என்பது மிக கொடிய நோயாகும். ஆனால் எய்ட்ஸ் வராமல் தடுக்க முடியும் என்பது அனைத்து நாடுகளுக்கும் தெரியும். அதனால் தான் டிசம்பர் 1-ம் தேதியை எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்களில் மகளிர் தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்காக்கும் மருந்துகளாக இருந்தாலும் சரி எந்த மருந்துகளாக இருந்தாலும் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெனரிக் மெடிசன் என்ற பெயரில் அரசு நிறுவனமான அமுதசுரபி மூலம் ஒரு மருந்தகம் புதுச்சேரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகடை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய நிறுவனம். இங்கு வெளி கடைகளைக் காட்டிலும் 40 முதல் 60 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்" என்றார்.

இந்த மருந்தகத்தின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தகட்டமாக புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி மூலம் மேலும் பல மருந்தகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com