திருச்சி அரசு மருத்துவமனையில் குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் குவியல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளது குறித்து நேற்று புதிய தலைமுறையில் பிரத்யேகமாக செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியின் எதிரொலியாக, தற்போது மருத்துவமனை முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு பின்புறம் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கிக் கிடப்பது குறித்தும், குளுக்கோஸ் பாட்டில்கள், காலணிகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் ஈக்களும், கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாவதாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு கட்டடத்தின் பின்புறம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி வாகனங்களைக் கொண்டு குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் முடநீக்கியல் துறை பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேதமடைந்த படுக்கைகள், தலையணைகளும் தற்போது அகற்றப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக மாநகராட்சி வாகனங்கள் வராததால் குப்பைகள் தேங்கியதாகவும், விரைந்து அகற்றப்படும் என திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த மேலாளர் தெரிவித்த நிலையில், அனைத்து குப்பைகளும், மாநகராட்சி வாகனங்களைக் கொண்டு இன்று முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டதுடன் சேர்த்து, அப்பகுதியும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும், மருத்துவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-பிருந்தா