அடையாறு அருகே முகத்துவாரத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன.
பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அடையாறு முகத்துவாரம் பகுதியில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ தடுப்பூசிகள், மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கடற்கரை மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. 5 நாட்களுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் இதுபோன்ற மருத்துவ கழிவுகள் அதிக அளவில் கிடப்பதாக இங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று அடையாறு முகத்துவாரத்தில் இருந்து நொச்சிக்குப்பம் மெரினா கடற்கரை தொடக்கம் வரை மணலுக்குள் பல்வேறு வகையான மருத்துவக் கழிவுகள் இருப்பது புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் தெரியவருகிறது. கொரோனா காலத்தில் அதிக அளவில் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் சமூக விரோதிகளின் பயன்பாடு காரணமாக இந்த பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
அடையாறு கரையோரத்தில் இருந்து சமூக விரோதிகளால் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் அடித்து வரப்பட்டு கடற்கரை பகுதிகளில் குவிந்து கிடக்கின்றது. அடையாற்றில் இருந்து வங்கக் கடலுக்கு வெளியேற்றப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் அளவு வருடத்திற்கு 11.6 டிரில்லியன் டன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக வாட்டர் நிறுவனம் 2021ல் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இந்நிலையில் தொடர்ச்சியாக இந்தப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுவது கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.