வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி குடும்ப வறுமையால் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் சிங்கன்குத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பார்வதி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகள் கிருத்திகா ஆயக்காரன்புலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,100 மதிப்பெண்கள் பெற்றார்.
தான் மருத்துவம் படித்து ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தனது செல்ல மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடைய நிலம் முழுவதையும் குறைந்த விலைக்கு விற்றும், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் கிருத்திகாவை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தனர்.
தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு கிருத்திகாவும் ரஷ்யாவில் அதிக மதிப்பெண்களுடன் அரியர் ஏதுமின்றி இரண்டாண்டு மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார். மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கு உரிய கட்டணத்தை செலுத்தும்படி ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்த நிலையில் படிப்புக் கட்டணத்தை பெற்று வருவதற்காக விடுமுறையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருத்திகா சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி தனது மகள் கிருத்திகாவின் படிப்புக்குத் தேவையான பணத்திற்கு அலைந்த வண்ணம் இருந்திருக்கிறார்.
ஆயக்காரன்புலத்தில் உள்ள தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியில் (இந்தியன் ஓவர்சிஸ் வங்கி) கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விக் கடன் கேட்டு அலைந்திருக்கிறார். ஆனால் வங்கி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் முன்பணம் தந்தால்தான் கல்விக்கடனை வழங்கமுடியும் என தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. ஊரில் உள்ள கொடை வள்ளல்களிடமும் தனது மகள் படிப்பிற்கு பணம் கேட்டுள்ளார். பார்ப்போம் என்ற வழக்கமான பதில்தான் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்திருக்கிறது.
மனம் தளராத கிருஷ்ணமூர்த்தி அரசின் கதவையும் விடாமல் தட்டியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து தனது மகள் கிருத்திகாவின் மருத்துவப் படிப்பை தொடர உதவி செய்யும்படி மனு அளித்துள்ளார். ஆனால் இதுநாள் வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
தனது மருத்துவப் படிப்பிற்கு பெற்றோர் சிரமப்பட்டு வருவதைக் கண்டு மனமுடைந்த கிருத்திகா, இந்த பிரச்னைக்கு தீர்வு தற்கொலைதான் என முடிவெடுத்திருக்கிறார். இதனால் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப்படிப்பை முடித்து மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய கிருத்திகா வறுமையின் காரணமாக படிப்பை தொடரமுடியாமல் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.