ராமநாதபுரத்தில் போதை மாத்திரைகளையும், போதைக்காக டானிக்கையையும் அதிக அளவில் விற்பனை செய்து வந்த மருந்தகம் தொடர்பாக
3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் போதை மாத்திரைகளை வாங்கி விழுங்கிய சதாம் உசைன் என்பவர்
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையை தொடங்கிய தொண்டி போலீசார்,
அந்த மருந்தகத்தை நோட்டமிட்டனர். காவல் சார்பு ஆய்வாளர், அரசு மருத்துவர் தலைமையில் தீவிரமாக மருந்தகம் கண்காணிக்கப்பட்டது.
அப்போது தொண்டியைச் சேர்ந்த முகமது சியாத், முகமது பயாஸ் ஆகிய இருவர் அதிக வீரியம் கொண்ட தூக்க மாத்திரைகளை போதைக்காக
வாங்கியுள்ளனர். அதேபோல், போதை மிகுந்த டானிக் பாட்டில்களையும் வாங்கியுள்ளனர். ஒரு பாட்டில் ரூ.150 வீதம் 55 பாட்டில்களை
மொத்தமாக வாங்கியுள்ளனர். மருத்துவரின் பரிந்துரை ஏதும் இல்லாமல் போதைக்காகவே இவை வாங்கப்படுவதை உறுதி செய்த போலீசார்,
வாலிபர்கள் இரண்டு பேரையும், மருந்தக உரிமையாளர் மகன் ஒருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முகமது சியாத்திடம் இருந்து 250 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். இதற்கிடையே போதை மாத்திரைகளை விழுங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சதாம் உசைன் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.