ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து வணிகர்கள் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்துகின்றனர்.
ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிப்பது என்று அண்மையில் மத்திய அரசு வரைவறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை 24 மணிநேரம் மூடி, மருந்து விற்பனையாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாக அறிவித்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்க மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று மருத்து விற்பனையாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இதன் மூலம் காலாவதி மருந்துகள், போலி மருந்துகள் அனுப்பப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கூறும் தமிழ்நாடு மருந்து வணிக சங்கத்தினர், ஆன்லைன் விற்பனை என்பது மருந்தகங்களே இல்லாமல் செய்துவிடும் நிலையை ஏற்படுத்திவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர். மேலும் கிராமங்கள், சிறுநகரங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் நிலை வரும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தடை செய்யப்பட்ட மருந்துகளை சிறுவர்கள், தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வாங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கும் மருந்து வணிகர்கள், ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்கிறார்கள்.