தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை தொடர்ந்து, அரசு சார்பில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள் உட்பட தயாராக உள்ளன. கூடுதலாக, தமிழகம் முழுவதுமுள்ள 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 770 ஜீப் மருத்துவக் குழுக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கும் உடனடியாக செல்லும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளன.
போதுமான மருந்துகள், பாம்புகடி, பூச்சிக்கடிக்கான மருந்துகள், ஐவி திரவங்கள், டெட்டனஸ் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காக பொதுமக்கள் பின் வரும் எண்களை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்: 044 - 29510400, 044 - 29510500, 9444340496, 8754448477.
தொடர்புடைய செய்தி: சென்னையில் மழை, வெள்ளம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு
மருத்துவமனைகளின் 108 வாகனங்கள் பாதுகாப்பான இடங்களில் முடிந்தவரை காவல்நிலையங்களுக்கு அருகில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு, விரைந்து அனைத்தும் செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.