முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என இந்திய மெடிக்கல் கவுன்சில் கமிட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த அறிவிப்பின்மூலம், நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய பாஜக அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
பயிற்சி மையங்களுக்காக மட்டுமே இந்த நீட் தேர்வு நடத்தப்படுவதாக விமர்சித்துள்ள அவர், நீட் தேர்வுக்கு எதிராக ஏராளமானோர் உயிரை மாய்த்துக் கொண்டபோதிலும் மத்திய பாஜக அரசு இதயம் அற்றதாக இருந்து வருவதாக சாடினார். நீட் தேர்வு மூலம் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ள மத்திய பா.ஜ.க அரசு, ஆட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக மருத்துவ செயற்பாட்டாளர் சாந்தியை தொடர்பு கொண்டோம். அவர் கூறியன, “மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இம்மாதிரி 0% என குறைத்தது, அதிலும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதற்காகத்தான் இம்மாதிரி குறைத்ததாக மத்திய அரசு கூறியது ஏற்புடையது அல்ல. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறைந்த எண்ணிக்கையில் மருத்துவ இடங்கள் இருக்கும் போது, அதற்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் போட்டியிடும் போது அதிக மதிப்பெண்கள், நல்ல ரேங் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு இடமும் கிடைக்க வேண்டும். முறைகேடுகளும் இருக்க கூடாது.
முதல் இரண்டு கட்டங்களில் நடத்தப்பட்ட கலந்தாய்வுகளில் கலந்து கொண்டவர்கள் அந்த இடங்களை ஏன் தேர்வு செய்யவில்லை. முக்கிய காரணம் தனியார் கல்லூரிகளில் அதிகளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை முறைப்படுத்த அரசு தயாராக இல்லை.
(தேசிய மருத்துவ ஆணையம் (NMC) தனியார் மருத்துவக் கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50% இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இதற்கான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.)
NMC கூறுயதை தவிர்த்த மீதமுள்ள 50 இடங்களுக்கு கட்டணத்தை அவர்களே (தனியார் கல்லூரிகள்) நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். 50% இடங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு சொல்லியுள்ளது. மீதமுள்ள 50% வழக்கின் அடிப்படையில் சென்று கொண்டுள்ளது. பல லட்சம் ரூபாய் கட்டணமாக இருக்கும் போது தகுதியான திறமையான ரேங் வாங்கிய மாணவர்களால் அந்த சீட்டை பெற முடியவில்லை. candidate இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. candidate இருக்கிறார்கள். அவர்களால் எடுக்க முடியவில்லை.
அதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லாத மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தில் அதை முறைப்படுத்த வேண்டும். கல்லூரிகள் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அபராதத்தை அதிகப்படுத்தி சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்த வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசே கலந்தாய்வை நடத்த வேண்டும். அதைவிடுத்து ஒன்றிரண்டு கலந்தாய்வு நடத்தி, அதன் பின் கட்டணத்தையும் நிர்ணயிக்காமல் அதிகாரத்தை தனியாரிடம் கொடுத்து கட் ஆஃப் மதிப்பெண்ணையும் குறைத்தால் பணம் இருப்பவர்கள் கல்லூரி நிர்வாகம் எவ்வளவு பணம் கேட்கிறார்களோ அதை கொடுத்து படிக்கத்தான் செய்வார்கள். தகுதி படைத்தும் திறமையான மாணவர்கள் சேரமுடியாத சூழ ஏற்படும்.
போன வருடமும் இதே போல் செய்தார்கள். அப்போது உயர் சிறப்பு மருத்துவமனை எனப்படும் super speciality மருத்துவப்படிப்புகளில் கொண்டு வந்தார்கள். அப்போது அதிகமான இடங்களில் யாரும் சேரவில்லை. முதலில் கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தவர்கள் பின் பூஜ்ஜியத்திற்கு மாற்றினார்கள். எனவே ஒவ்வொரு முறையும் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது.
eligibility டெஸ்ட் என்பது தற்போது திணிக்கப்பட்ட ஒன்று. இதற்கு முன் common entrance test தான் இருந்தது. அதன்படி எத்தனை பேர் தேர்வு எழுதினார்களோ அத்தனை பேருக்கும் ரேங் போட்டுவிடுவார்கள். கலந்தாய்வு நடக்கும். அதில் குறைந்தபட்ச தகுதி என்ற ஒன்று கிடையாது. நடத்தப்பட்ட தேர்வுகள் என்பது போட்டித்தேர்வுகள். தகுதிக்கான தேர்வு அல்ல.
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்து குறைவான எண்ணிக்கையில் இடங்கள் இருந்தால் அப்போது போட்டித் தேர்வு நடத்தப்படும். ஆனால் இப்போது போட்டித் தேர்வும் நடத்துகிறார்கள், ரிசல்ட்டையும் சொல்கிறார்கள், கட்டணத்தையும் நிர்ணயிக்க மாட்டேன் என்கிறார்கள்.
எனவே இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. இது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனையை மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் முழுமையாக பார்த்து சரிசெய்யப்பட வேண்டும். தகுதியான நபர்களுக்கு இடங்கள் கிடைக்க வேண்டும். ஏழை மாணவர்கள் படிப்பதற்கு அரசே கட்டணத்தை செலுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கான கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும். படித்து முடிந்த பின்பும் அவர்களுக்கேற்ற வேலை கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் சரியானால் மட்டுமே இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்தது மட்டும் பிரச்சனை அல்ல. அதை முழுவதுமாக ஆய்வு செய்தே அதை தீர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.