தமிழகத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 508 முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்புகான அனுமதி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் 14 பிரிவுகளில் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான 384 இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வரும் கல்வியாண்டில் 124 புதிய முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 2018ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் ஆயிரத்து 250ஆக இருந்த நிலையில், கூடுதலாக 508 இடங்களை அதிகரிப்பதன் மூலம் 2019ஆம் ஆண்டில் ஆயிரத்து 758 இடங்களாக அதிகரிக்கும். அதேபோல், 2018ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கு 2 ஆயிரத்து 900 இடங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டில் 350 இளநிலை மருத்துவப் பட்ட படிப்பிற்கான இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படுகிறது. இதில், கரூர் அரசு மருத்துக் கல்லூரியில் 150 இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களும், நெல்லை மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 100 இடங்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.