கன்னியாகுமரியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் இணை இயக்குநர் மருத்துவர் வடிவேல் தலைமையில் ஒரு குழு கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துரித நடவடிக்கையில் ஈடுபட சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக ஒகி புயலால் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் தென் பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அதனால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.