போக்குவரத்து தொழிலாளர் விவகாரத்தில் மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த ஒருவாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினரும், 2.44 காரணி ஊதிய உயர்வுதான் வழங்க முடியும் என்று பிடிவாதமாக உள்ளனர். இதனால் போராட்டம் நீடித்து வருகின்றது.
இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தமிழக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊதிய உயர்வில் மாற்றம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் சில நீதிபதிகளை பரிந்துரை செய்தனர். ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நீதிபதிகள் நியமனம் செய்தனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், “தமிழக அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே இழுபறிக்கு 0.13 காரணி பிரச்னையாக உள்ளது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. இப்போதைய உத்தரவு அனைத்து இடைக்கால அடிப்படையிலானது. பணிக்குத் திரும்ப வேண்டும் என்பது எங்களது விருப்பம்.
பொதுமக்கள் மட்டுமின்றி தொழிலாளர்களும் பொங்கல் பண்டியகையை நிம்மதியாக கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தனர். ஊதிய உயர்வு தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய மத்தியஸ்தருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்தனர்.
போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமன உத்தரவையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனைக்கு பின் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 8 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முறைப்படி வாபஸ் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.