விளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்

விளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்
விளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்
Published on

வறட்சி, குடிநீர் பஞ்சம் என்று தமிழகம் தத்தளித்துக்கும் நிலையில் கெய்ல் நிறுவனம் விவசாயத்தை அழித்து எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 ஆம் தேதி, மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர். பயிர்களை அழித்து விளைநிலங்களில் குழாய் பதிப்பதைக் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தங்கள் உடலில் சேற்றைப் பூசிக்கொண்டு போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம். இவ்வாறு பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பள்ளத்தை எளிதில் சமன் செய்யவும் முடியாது.

ஊர் மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் தமது விருப்பம் போல விளைநிலங்களைச் சீரழிக்கும் பணியைச் செய்து வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கண்முன்னே அழிவதைப் பார்த்து விவசாயிகள் கதறி அழுது கண்ணீர் வடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.

கொச்சியிலிருந்து - பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடியதால் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்குத் தடை விதித்தார். உச்சநீதிமன்றம் வரையில் சென்று கெயில் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தாலும்,கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இச்சூழலில் காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com