செய்தியாளர் - ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சக்திவேல் (34). இவர் சிவகங்கை இளையான்குடியைச் சேர்ந்த ஏஜெண்ட் ராம்நாத் என்பவர் மூலமாக கடந்த 2015-ஆம் ஆண்டு மலேசியா சென்று புகாரி என்பவரது உணவகத்தில் பணியாற்ற தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாதமும் தன் சம்பளப் பணத்தை அனுப்பி வைத்ததோடு, அவ்வப்போது குடும்பத்தினரிடம் போனில் பேசியும் வந்துள்ளார் சக்திவேல்.
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பவேண்டும் என வேலை பார்த்த உரிமையாளரிடம் கூறியுள்ளார். அப்போது ஹோட்டல் உரிமையாளர், சக்திவேலின் பாஸ்போட்டை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளார். அன்றிலிருந்து சக்திவேலுக்குச் சம்பளம் கொடுக்காமல், பாஸ்போர்ட்டையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் சக்திவேலை தனிஅறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
அவரது நிலையை கண்டு வேதனையடைந்து இந்த தகவல் அனைத்தையும் சக்திவேலுடன் வேலை பார்த்த ஒரு நபர் யாருக்கும் தெரியாமல் வீடியோ கால் மூலம் சக்திவேலின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து தங்கள் மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, அவரை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேலின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.