மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுடைநம்பி (58). இவர் அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட அறிவுடைநம்பி சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வாயில் துணியை வைத்து அடைத்தபடி எரிந்த நிலையில் அறிவுடைநம்பி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் அறிவுடைநம்பி கையில் பெட்ரோல் கேனுடன் செல்வது பதிவாகியிருந்தது. வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் எரிந்து கிடப்பதால் கொலையா தற்கொலை செய்து கொண்டாரா என குடும்பத்தினர் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தடயங்கள் சேகரிக்கப்பட்டு, உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.