மயிலாடுதுறையில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் இந்த ஆதீனத்தில், குரு முதல்வரின் குருவான கமலை ஞானபிரகாசரின் குருபூஜை விழா மற்றும் தருமபுரம் ஆதீன கர்த்தரின் பட்டணப்பிரவேச விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டணப்பிரவேச விழாவில், ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் சுமந்து செல்வர். மனிதனை மனிதனே சுமந்துசெல்லும் இந்தச் செயல் மனித உரிமை மீறல் என்று கூறி திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் காவல்துறை தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டன.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த நிலையில், நேற்றிரவு பட்டணப்பிரவேச விழா கோலாகலமாக தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் பூண்டு, தங்க கொரடு, பாதரட்சை அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்லக்கை நான்கு கோடி நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேளதாளங்கள், சென்டைமேளம் ஒலிக்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆரவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீனமடத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கினார். புகழ்பெற்ற தருமபுர ஆதீன பட்டணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.