மயிலாடுதுறையில் அரசுப் பேருந்தின் பின் பக்க டயர் வெடித்து பலகை மேலே விழுந்ததில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 79 நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. கிராமப்புறம் செல்லும் பேருந்துகளில் அதிக அளவில் பொதுமக்கள், மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு பேருந்துகள் பாதிவழியில் டயர்வெடித்தும் பழுதடைந்து நிற்பது தொடர்கதையாக மாறிவருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து நீடுர் பட்டவர்த்தி, மணல்மேடு வழியாக திருச்சிற்றம்பலம் வரை செல்லும் 1சி அரசுப்பேருந்து இன்று மதியம் திருச்சிற்றம்பலத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகளை ஏற்றிகொண்டு வந்து கொண்டிருந்தது. அரசு மருத்துவமனை சாலையில் செல்லும்பொது பேருந்தின் பின்பக்க டயர் வெடித்ததின் வேகத்தில் பேருந்தின் பலகை உடைந்து டயரின் மேல்புறத்தில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவரது கால்களில் அதிவேகமாக அடித்ததில் அவர் படுகாயமடைந்து மயக்கமடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அந்த இளம்பெண்ணை சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். தற்போது இரு கால்களிலும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண் உதயாத்திமங்களம் மேலத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மனைவி விஜி என்பது தெரியவந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிற்றம்பலம் செல்லும் 1சி அரசுப்பேருந்து போதிய பரமாரிப்பின்றி உள்ளதாகவும் பழைய டயர்களை மாற்றாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்துகளை முறையாக பராமரித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.