மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தின் முக்கிய சந்திப்பாக மயிலாடுதுறை நகராட்சி தற்போது இருக்கிறது. திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி ஆகிய இடங்களின் கூட்டுச் சந்திப்பாகவும் திகழ்கிறது. பிரபலமான ஊராக இருப்பதாலும், தங்களுக்கென தனி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை தேவை என்றும் நீண்ட நாட்களாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். நாகையில் இருந்து பிரிக்கப்பட்டு விரைவில் மயிலாடுதுறை புதுமாவட்டமாக நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார். மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்படுவதையடுத்து தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது.