மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்காக வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியுள்ளது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் மூலம் 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டுள்ளது. இதனால் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 118 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
இரவு 8 மணி முதல் மேட்டூர் அணியிலிருந்து வினாடிக்கு 30,000 கனஅடி நீர் விவசாயத்திற்காக திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கரையோர கிராமங்களை கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சேலத்தில் உள்ள கரையோர கிரமாங்களான 21 வருவாய் ஊர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இரவு 8 மணி ஆனதும், மேட்டூர் அணையில் வினாடிக்கு திறக்கப்பட்ட 20,000 கனஅடி நீர், 21,000 கனஅடி நீராக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 8000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய்களில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 1000 கனஅடியாக உயர்த்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு மொத்தம் 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,644 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 88.73 டிஎம்சி உள்ளது.