பாதியில் முடிந்த படிப்பு.. பணத்தாசையால் கள்ளச்சாராய கடத்தல்.. 19 வயதேயான மாதேஷின் அதிர்ச்சி பின்னணி!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தில் தோண்டத் தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளி வருகின்றன. அந்த வகையில் 19 வயதே ஆன மாதேஷ், விஷ சாராய கடத்தல் கும்பலுக்கு தலைவனானது எப்படி என்று தெரியவந்துள்ளது. அதிர்ச்சிதரும் அத்தகவல்களை, காணலாம்..
19 வயதாகும் மாதேஷ்
19 வயதாகும் மாதேஷ்புதிய தலைமுறை
Published on

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சிபிசிஐடி போலீசார் இதுவரை கைது செய்துள்ள 15 பேரில் இருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் (19) என்பவர்தான். இவர் மொத்த சாராய வியாபாரியான சின்னதுரைக்கு மெத்தனாலை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டவர்.

மாதேஷ் தவிர கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னதுரை, ஷாகுல் ஹமீது, ஜோசப் ராஜா, ராமர், சக்திவேல், கண்ணன், சிவக்குமார், கதிர் என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதில் குறிப்பாக 19 வயதாகும் மாதேஷ், டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து இரண்டு மாதங்களில் படிப்பை விட்டுவிட்டு, பணத்தாசையால் விஷ சாராய கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் சாராயம் வாங்கி விழுப்புரம் வழியாக கடத்தி வரும் கும்பலுடன் மாதேஷ் அறிமுகமாகி, கள்ளக்குறிச்சி சாராய மொத்த வியாபாரியான சின்னதுரையின் அறிமுகத்தை பெற்றுள்ளார்.

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து இருப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார். சாராயத்தில் மெத்தனாலை கலந்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சப்ளை செய்வதாகவும் சின்னதுரையிடம் மாதேஷ் கூறியதாக தெரிகிறது. இப்படியாக, ஆந்திரா எல்லைப்பகுதிகளில் உள்ள செயல்படாத கெமிக்கல் நிறுவனங்கள், சென்னை மாதவரம் அருகேயுள்ள கெமிக்கல் நிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்தி கொண்டு மெத்தனாலை கடத்தியுள்ளார் மாதேஷ்.

இதன்பிறகு மெத்தனாலை தண்ணீரில் கலந்து சாராயமாக விற்பனை செய்துவந்துள்ளார். மாதேஷிற்கு மெத்தனால் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த சிவக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

19 வயதாகும் மாதேஷ்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் | போலி பில் மூலம் மெத்தனால் வாங்கியது அம்பலம்!

மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தொழிற்சாலையில் தான் பணியாற்றி வந்ததாகவும், மாதேஷூடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 15ஆம் தேதி மூன்று பேரல்களில் பயன்படுத்தப்பட்ட மெத்தனாலை, தின்னர் என்ற பெயரில் கொடுத்ததாகவும் சிவக்குமார் கூறியுள்ளார். அதை ஏற்றிச்செல்ல வந்த டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்கனவே ஆறு பேரல்கள் இருந்ததாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

19 வயதாகும் மாதேஷ்
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் | "ரூ 10 லட்சம் கொடுத்தது தீய முன்னுதாரணம்" - உயர்நீதிமன்ற நீதிபதி

பண்ருட்டியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி வைத்திருக்கும் சக்திவேல் என்பவரின் சரக்கு வாகனத்தில் அவற்றை அனுப்பி, பின்னர் கதிர் என்பவர் மூலமாக சின்னதுரையிடம் மாதேஷ் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதன்பின்னர் சின்னதுரை, 6 பேரல்களை சாராய விற்பனையாளர்களிடம் கொடுத்துவிட்டு, மூன்று பேரல்களை கல்வராயன் மலை அடிவாரக் காடுகளில் பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. இதைதான் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவக்குமாரிடம் மூன்று மெத்தனால் பேரல்களை மாதேஷ் வாங்கிய நிலையில், மீதமுள்ள 6 பேரல்களை எங்கு வாங்கினார்? ஆந்திராவிலும் வாங்கப்பட்டு இருப்பதால் அந்த நிறுவனங்கள் எவை? பல இடங்களில் வாங்கியவற்றை எங்கே பதுக்கி வைத்தார்? பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாதேஷையும், சின்னதுரையையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

19 வயதாகும் மாதேஷ்
சென்னையில் 1,800 லிட்டர் மெத்தனால் பறிமுதல்... கள்ளக்குறிச்சி சம்பவத்துடன் தொடர்பா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com