பொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை
காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரையில் சேர்ந்துள்ள 12 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழக பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறைகள் வரும். இதனால் பொங்கல் விடுமுறைக்கு மக்கள் அனைவரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் காணும் பொங்கலுக்குச் சுற்றுலா தலங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படும்.
இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் ஏராளமானோர் கூடினர். குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்து பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர். இதையொட்டி குப்பைகள் குவியும் என்பதால் முன்கூட்டியே மாநகராட்சி சார்பில் கடற்கரை மணல் பரப்பில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவு நிலவரப்படி சென்னை மெரினா கடற்கரையில் 9.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல் பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரையில் 2.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இரவு பகலாக குப்பைகளை அகற்றும் பணியில் 200 மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குப்பைகள் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன.
கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் 27 டன் அளவிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 15 டன் அளவிலும் என மொத்தம் 42 டன் குப்பை அகற்றப்பட்டன. இந்தப் பணிகள் இன்று முழுவதும் தொடரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு தடையால் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அகற்றப்படும் குப்பை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.