மதுரை ஆதீன மடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, மறைந்த 292 வது ஆதீனம் அருணகிரிநாதருக்கு பளிங்கு சிலை வைக்கபட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல், மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் மறைந்த மதுரை ஆதீனத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மடத்திற்கு சென்று வருகின்றனர். அவர்களுக்காக, ஆதீன மடத்தில் மறைந்த ஆதீனத்தின் பளிங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையானது கடந்த ஆண்டே ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு மடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மதுரை ஆதீனம் உயிரோடு இருந்த நேரத்திலேயே அவருக்கு பளிங்கு சிலை செய்யப்பட்டதன் பின்னணியில், கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருட காலமாக ஆதீனம் யாரையும் சந்திக்காமல் இருந்தார் என்பதால் அவரை பார்க்க வரும் பக்தர்கள் மற்றும் அன்பர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்ற நோக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சிலை மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் அனுமதியுடன் ஒன்றரை வருடத்துக்கு முன்பு கோவையை சேர்ந்த தம்பிரான் என்பவர் தயார் செய்து கொடுத்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் உருவத்தை போன்றே தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பளிங்கு சிலை 500 கிலோ எடை கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஆதீன அறைக்குள் வைக்கப்பட்டிருந்த இச்சிலை, மதுரை ஆதீனம் உடல்குறைவால் கடந்த 8 ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் மடத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆதீனத்தின் மறைவுக்கு பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக மதுரை ஆதீன மடத்தின் முன்பக்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- மணிகண்டபிரபு