மதுரையில் பழமை வாய்ந்த சிவன் கோயில் அருகே உள்ள கண்மாய் கரையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடி பகுதியில் பெரியதீர்த்தனம் மற்றும் சின்னதீர்த்தனம் ஆகிய கண்மாய்கள் உள்ளன. அந்த பகுதியில் நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயை தூர்வாரும் போது சிவன், நந்தி போன்ற சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பெய்த மழைக் காரணமாக அப்பகுதிகளில் மனித எலும்புகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. மேலும், இரு இடங்களில் மனித எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டது போன்றும் தென்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் குவியலாக வெளிவரும் மனித எலும்புக்கூடுகள் அப்பகுதி மக்களின் பரவலான பேசுபொருளாக மாறியுள்ளது.