பல நூறு கோடிகள் தமிழக அரசுக்கு குத்தகை தொகை பாக்கி.. இத்தனை நிறுவனங்கள் லிஸ்டில் இருக்கா?!

கிண்டி ரேஸ் க்ளப் தமிழக அரசுக்கு குத்தகை தொகையை பாக்கி வைத்திருப்பது சர்ச்சையான நிலையில், இதைப்போல் பல்வேறு நிறுவனங்கள் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகை பலநூறுகோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசுபுதியதலைமுறை
Published on

கிண்டி ரேஸ் க்ளப் தமிழக அரசுக்கு குத்தகை தொகையை பாக்கி வைத்திருப்பது சர்ச்சையான நிலையில், இதைப்போல் பல்வேறு நிறுவனங்கள் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகை பலநூறுகோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

கிண்டி ரேஸ் கிளப்பிற்கான குத்தகை விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் அரசு
நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள் மிகப்பெரிய தொகையை பாக்கி வைத்துள்ளது
ஆய்வில் தெரியவந்துள்ளது.

மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு 160 புள்ளி 86 ஏக்கர் நிலம் 99
ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு 812 கோடியே 49 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

காஸ்மோபாலிடன் கிளப்பிற்கு 80 புள்ளி 40 ஏக்கர் நிலம் 25 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. 2026 உடன்
குத்தகை காலம் முடிவடையும் நிலையில், அந்த அமைப்பு அரசுக்கு 119 கோடியே 75 லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை வைத்துள்ளது.

அகில இந்திய வானொலிக்கு வழங்கப்பட்ட 10 கிரவுண்ட் நிலத்தின் குத்தகை காலம் 110 ஆண்டுகள் ஆகும். இந்நிறுவனம், அரசுக்கு 39 கோடியே 92 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
அடையார் காந்திநகர் கிரிக்கெட் கிளப்பிற்கு 4 கிரவுண்ட் 933 சதுர அடி நிலம் 1959 முதல்1989 வரை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த கிளப் 2 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

கலாஷேத்ராவுக்கு 2.34 ஏக்கர் நிலம் 37 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்ட நிலையில், 2 கோடியே 93 லட்சம் ரூபாயை அந்த அமைப்பு அரசுக்கு பாக்கி வைத்துள்ளது.

டைடல் பார்க்கின் வாகன நிறுத்தத்திற்காக 2 ஏக்கர் நிலம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஒரு கோடியே 89 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளது.

 6 கிரவுண்ட் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்த பி.டி.லி செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை 129 கோடியே 83 லட்சம் ரூபாயும் அரசுக்கு பாக்கி வைத்துள்ளன.

மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ்-க்கு 43.57 ஏக்கர் நிலம் 1986 முதல் 2016 வரை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிறுவனம் அரசுக்கு 3 கோடியே 58 லட்சம் கொடுக்க
வேண்டும்.

ஸ்ரீராமவிலாஸ் சர்வீஸ் நிறுவனத்திற்கு ஏக்கர் நிலம் 18 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், அந்நிறுவனம் 21 கோடியே 54 லட்சம் ரூபாயும், இன்ஸ்ட்டியூட் ஆப் இன்ஜினியர்ஸ் என்ற பொறியாளர்களின் அமைப்புக்கு 9 கிரவுண்ட் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், அதுவும் 12 கோடி ரூபாயை அரசுக்கு
நிலுவை வைத்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு 1120 சதுர அடி நிலம் 1980 முதல்1986 வரை 6 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், அது அரசுக்கு 88 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

சத்யா ஸ்டூடியோவுக்கு 14 கிரவுண்ட்  நிலம் 30 ஆண்டுகளுக்கு
குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை காலம் 1998ஆம் ஆண்டுடன்
நிறைவடைந்த நிலையில் 31 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ளது.

இதேபோல், ஸ்பிக் நிறுவனத்துக்கு 8 கிரவுண்ட் நிலம் 3 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது. அந்நிறுவனம் 2 கோடி ரூபாய் அரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளது.     

இந்த நிறுவனங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் சென்னையில்
அரசின் நிலங்களை குத்தகை எடுத்து அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையினை நிலுவையாக வைத்துள்ளன. இவை தவிர தனிப்பட்ட நபர்களும் சிறிய அளவிலான நிலங்களை குத்தகைக்கு எடுத்து அரசுக்கு நிலுவைத்தொகையினை செலுத்தாமல் உள்ளதாக தமிழ்நாடு நில நிர்வாக ஆணையரகம்
தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com