சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் - ஓ.டி.எ பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூண்களில் மனுநீதி சோழன் கதை சொல்லும் ஓவியங்கள் பொது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சென்னையை அழகுமயமாக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவை இணைந்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் உள்ள சுற்றுச் சுவர்கள் அரசு அலுவலகங்களில் உள்ள சுற்றுச் சுவர்கள் ஆகிய பகுதிகளில் வண்ணம் தீட்டப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இதே போல மெட்ரோ ரயில் செல்லக்கூடிய உயர் பாலங்களில் உள்ள தூண்களிலும் - தமிழர் கலாச்சாரம், மக்கள் வாழ்வியல், இயற்கை சூழலியல், குழந்தைகள். கிராமிய கலைகள் ஆகியவை அடங்கிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வரும் வழியில் ஓ.டி.எ அருகே உள்ள மெட்ரோ ரயில் தூண்களில் மனுநீதிச் சோழன் மாடு ஒன்றுக்கு நீதி வழங்கிய நிகழ்வு ஓவியங்களாக தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.
திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட மனுநீதிச் சோழன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கிய வரலாற்றை இந்த ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன. இதை அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குறிப்பாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.