தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மலக்குழி மரணங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு விருதுநகரில் வீட்டின் மலக்குழியை சுத்தம் செய்த இரண்டு பேரில் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இதேபோல சென்னையில் உள்ள மால் ஒன்றின் மலக்குழியை சுத்தம் செய்யும் பணியின் போது ஒருவர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் மலக்குழியை சுத்தம் செய்த இரண்டு பேர் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர். தூத்துக்குடியில் மலக்குழியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நான்கு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மாநகராட்சி மலக்குழியின் ராட்சத மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை நீக்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்தியாவில் மலக்குழி மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணியின்போது 2019ஆம் ஆண்டு 118 பேரும், 2020ஆம் ஆண்டு 19 பேரும், 2021ஆம் ஆண்டு 24 பேரும், 1993ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 971 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள்தெரிவிக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த அபாயகரமான பணியில் ஈடுபட்ட சுமார் 340 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மலக்குழியில் பணிபுரிவதால் தங்கள் பிள்ளைகளைக்கூட தூக்கி கொஞ்ச முடியவில்லை என தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். துர்நாற்றத்துடனே பணிபுரிய வேண்டிய சூழலால் குழந்தைகளை கொஞ்சக்கூட முடியவில்லை. மலக்குழிகளை சுத்தம் செய்வதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன வேறுவழியின்றி மனஅழுத்தத்துடன் பணிபுரிய வேண்டியுள்ளது என்கின்றனர்.
பணிப்பாதுகாப்பு, ஊதியம், கழிவுகளை சுத்தம் செய்ய உபகரணங்களையும் அரசு வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது அதிகம்பேர் மரணமடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், சென்னை புறநகர்ப் பகுதிகளில் சில நாட்களில் 4 பேர் மரணமடைந்துள்ளனர்.
சென்னை பெருங்குடி கிரீன் ஏக்கர்ஸ் சாலையில் ஒருங்கிணைந்த அடுக்குமாடு குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய கடந்த 29ஆம் தேதி பெரியசாமி, தட்சணாமூர்த்தி ஆகிய இருவர் வந்திருந்தனர். சுத்தம் செய்யும் பணி பாதியளவு முடிந்த நிலையில், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியபோது இரண்டு பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
அதேபோல, சென்னை மாதவரத்தில் கடந்த 28ஆம் தேதி பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்தபோது விஷவாயு தாக்கி நெல்சன் என்ற ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவிக்குமார் என்ற தொழிலாளியும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கும் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளன.
இதுதொடர்பாக புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.