இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் கழிவுகளை அகற்றும் பணியின்போது இறந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகமே அதிகபட்சமாகும்.
கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் இறப்பது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி கழிவுகளை அகற்றும் பணியின்போது அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயிரிழந்த 620 பேரில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்தரபிரதேசத்தில் 71, ஹரியானாவில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இது 15 மாநிலங்களை சேர்ந்த தரவுகள் தான், அனைத்து மாநிலங்களின் தரவுகளும் கிடைத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.