கூட்டணி, தொகுதி பங்கீடு என்று மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்று பிற்பகல் மக்களவை தேர்தலுக்கான தேதியையும், எத்தனை கட்டமாக நடைப்பெறும், பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்தான தகவல்களை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது.
இப்படி அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியிலில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிரடி அறிவிப்பினை அக்கட்சி நேற்று இரவில் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், தன்னுடைய தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். இதனையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதற்காக கூட்டணி தொடர்பான பேச்சு வார்தையும் நடைப்பெற்று வந்தது. அதிமுக உடன் அவரின் கூட்டணி அமையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தரும் வகையில், அவர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அவரே நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்தான் அவர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக நேற்று கட்சி தரப்பில் அறிக்கையொன்று வெளியானது. அதை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் என அறியப்படும் கண்ணதாசன் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “சென்னை வளசரவாக்கத்தில் இந்திய ஜனநாயகப்புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் கண்ணதாசனான எனது தலைமையில் கூட்டப்பட்டது. இதில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சிகள் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
கட்சி தொடர்பான பொறுப்புகள் மற்றும் வரும் தேர்தலில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் பொறுப்புகள் என அனைத்தையும் இனி பொதுச்செயலாளருக்கு வழங்க நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகானின் அழைப்பின் பெயரில் நாங்கள்தான் கட்சியை தொடங்கினோம். மற்றபடி கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தயாரிப்பது உட்பட அனைத்தும் நாங்கள்தான் செய்தோம். மேலும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் எங்களின் உறுப்பினர்கள்தான். நிர்வாக ரீதியாக தலைவர் பொறுப்பினை தவிர அனைத்தும் எங்களுடையதுதான்.
இப்படி இருக்க, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், இவர் தான்தோன்றிதனமாக, நிர்வாகிகளிடம் விவாதிக்காமல் எங்கிருந்தோ வரும் தகவலை கொண்டு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கிறார்.
இது கட்சியின் உள்ளேயே நிர்வாக ரீதியாக தேக்க நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். எங்களுடைய அவசர கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். தேர்தலுக்கு பிறகு புதிய தலைவர் உருவாக்கப்படுவாரா என்பதை தெரிவிப்போம்.
மற்றபடி இனி மன்சூர் அலிகான் தன்னிச்சையாக இயங்க முடியாது. ஏனெனில் கட்சி நிர்வாகம் அவரிடத்தில் இல்லை. கட்சி பதிவிற்கான ஆவணங்களில் பெரும்பான்மையான ஆவணங்கள் எங்களுடையதாகதே இருக்கிறது. குறிப்பிட்ட 5, 6 ஆவணங்கள்தான் அவரிடத்தில் உள்ளன. மீதமுள்ள 110 ஆவணங்களும் எங்களுடையதாகவே உள்ளது. ஆகவே கட்சி பெரும்பான்மை எங்களுக்குதான் சொந்தம்.
நாங்கள் இவ்வளவு காலம், கொள்கை அடிப்படையில் இயங்கியவர்கள். ஆகவே இவர் போகிறப்போக்கில் பேசுவதை எங்களால் ஏற்றுகொள்ளமுடியாது. இவர் இக்கட்சியில் இனி ஒரு உறுப்பினராக இருக்கலாம், அதைத்தாண்டி எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், “கண்ணதாசன் என்பவர் பொதுச்செயலாளராக இல்லை” எனக்கூறி, கண்ணதாசன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புது அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ஜனநாயக புலிகள் என்ற இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக குன்றத்தூரை சேர்ந்த பாலமுருகன்தான் உள்ளார். சகோதரர் கண்ணதாசன் என்ற நபர் மூத்த சங்க உறுப்பினர் செல்ல பாண்டியன் அவர்களால் ஆபீஸ் பாயாகத்தான் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவ்வபோது ‘உடன் வருகிறேன் அண்ணா’ என்று வந்து பயன்பெற்றார். தமிழ்நாடு தமிழருக்கே என சட்டை அணிந்து அவர் வந்ததைகூட கண்டித்தேன். மேலும் இலங்கைக்கு யாரையோ அனுப்ப வேண்டும் என ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்.
சமீபத்தில் ரப்பர் ஸ்டாம்ப், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளார். அவர்குறித்து யாரும் கவலை தெரிவிக்க வேண்டாம். தமிழனை இதனால்தான் வேலைக்கு யாரும் வைப்பதில்லை. அவர் சேர்த்த உறுப்பினர்களை விடுவித்து புதிய உறுப்பினர்களை கொண்டு வந்து மீள் மனு செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கி விட்டோம்.
நான் ஆரணி, பெரம்பலூர் பகுதியில் ஆதரவு திரட்டி வருவதால் மிகுந்த வேலையாக உள்ளேன். உறுப்பினர்கள் யாரும் அவர் மீது கோபம் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.