மன்னார்குடியில் அரசுப்பள்ளி ஆசிரியரிடமிருந்து ரூ.4.60 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அரிச்சபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நீடாமங்கலம் அருகே உள்ள கற்கோவில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது மன்னார்குடியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் கண்ணன், சொந்தமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் மன்னார்குடி கடைவீதியில் இயங்கும் பரோடா வங்கியில் வங்கிக் கடன் பெறுவதற்காக இன்று கண்ணன் வங்கிக்கு சென்றுள்ளார். ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வங்கியில் இருந்து ரொக்கமாக எடுத்துக்கொண்ட கண்ணன் வங்கியை விட்டு வெளியே வந்து, தனது இருசக்கர வாகனத்தில் உள்ள டேங்க் கவரில் பணத்தை வைத்துள்ளார்.
அப்போது கண்ணனை நோக்கி வந்த மர்ம நபர் கீழே நூறு ரூபாய் நோட்டு கிடக்கிறது. அது உங்களுடையது என்றால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி கண்ணனின் கவனத்தை திசைதிருப்பி இருசக்கர வாகன டேங்க் கவரில் இருந்த 4 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மன்னார்குடி காவல்துறையினர் உடனடியாக வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியோடும் விசாரணை நடைபெற்று வருகிறது. திரைப்பட பாணியில் வங்கி வாசலில் பட்டபகலில் அரசுப்பள்ளி ஆசிரியரிடம் நூதன முறையில் 4 லட்சத்து 60 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.