மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் காமராஜின் தோல்மீது கைபோட்டு பேசியபடி சென்ற சசிகலாவின் சகோதரர் திவாகரன், சாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் ஆள்காட்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிசேகம் முடிந்த பின்பு ஆள்காட்டி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சாமி தரிசனம் செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தார். அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர் இருவரும் ஒன்றாக நின்று சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து கோயில் பிரகாரத்தில் இருவரும் வலம் வந்தபோது சசிகலாவின் சகோதரர் திவாகரன் முன்னாள் அமைச்சர் காமராஜின் தோலில் மீது கைபோட்டு பேசியபடி நடந்து சென்றனர். இதனை அங்கிருந்த பொதுமக்களும் அதிமுகவினரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
முன்னாள் அமைச்சர் காமராஜ், சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் ஒன்றாக சாமி தரிசனம் செய்தது அதிமுகவினர் இடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.